லியோ டால்ஸ்டாய் எழுதிய ஒரு அருமையான கதையால் கவரப்பட்டார் ஓஷோ.
ஒரு மிக உயர்ந்த அறிவை போதிக்கக்கூடிய கதை அது.
ஒரு ஊரில் புகழ்பெற்ற ஒரு பாதிரியார் இருந்தார்.
பைபிளிலிருந்து மிகச் சிறந்த விஷயங்களை எடுத்து அவர் சொற்பொழிவு ஆற்றுவார். அதைக் கேட்பதற்காக தேவாலயத் திற்கு நிறைய மக்கள் வருவார்கள்.
மக்கள் மத்தியில் அவருக்குப் பெரிய செல்வாக்கு இருந்தது. அவருக்கு நிகர் அவர்தான் என்று மக்கள் பொதுவாக பேசிக் கொள்வார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் அந்த ஊருக்கு அருகிலிருந்த கடலோர கிராமத்திற்குப் புதிதாக வந்திருக்கும் மூன்று மனிதர்களைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டார்கள்.
அவர்களை நேரில்சென்று அவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் அசாதாரண சக்தி படைத்த மனிதர்கள் என்பதாக மக்கள் உணர்ந்தார்கள்.
"ஆன்மிக உணர்வுகொண்ட அற்புத மனிதர்கள்' என்று அனைவரும் நினைத்தார்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அந்த மூன்று மனிதர்களையும் பார்த்தார்கள்.
அவர்களைப் பார்த்தபிறகு, தங்களுடைய கஷ்டங்கள் முற்றிலுமாக நீங்கிவிட்டதாக மக்கள் கூறினர். தங்களுடைய வறுமை நிலை இல்லாமல் போய்விட்டதாக கூறினர்.
அந்தச் செய்தி பாதிரியாரின் செவிகளிலும் விழுந்தது.
அவருக்கு அது ஆச்சரி யத்தை உண்டாக்கியது. தன்னைத் தாண்டி அந்த பகுதியில் மக்களை ஈர்க்கும் மூன்று மனிதர்கள் வந்து சேர்ந்திருக்கின்றனர் என்ற விஷயத்தை அவரால் நம்பவே முடியவில்லை.
சமீபகாலமாக தன்னைப் பார்க்க எப்போதும் தேவாலயத்திற்கு வரக்கூடிய மக்கள் கூட்டம் மிகவும் குறைந்துவிட்டதற்கான காரணமும் அவருக்குப் புரிந்தது.
ஒருநாள் அவர்களைக் கட்டாயம் பார்த்தேயாக வேண்டும் என்ற திட்டத்துடன் அவர் படகில் புறப்பட்டார். அந்த மூன்று மனிதர்களும் இருக்கக்கூடிய கிராமத்தை அடைந்தார்.
படகோட்டியிடம் படகை ஒரு ஓரத்தில் நிறுத்துமாறு கூறிவிட்டு, அந்த மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு நடந்துசென்றார்.
கடற்கரைக்கு அருகிலேயே அவர்கள் மூவரும் தங்களின் வேலைகளில் மூழ்கியிருந்தனர். மிகவும் சாதாரண தோற்றத்துடன், மிகச் சாதாரண ஆடைகளை அணிந்து அவர்கள் காட்சியளித்தனர்.
பார்க்கும்போதே அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பது தெரிந்தது.
ஒரு மனிதன் மீன் பிடிக்கும் வலையின் பின்னல்களைச் சரிசெய்து கொண்டிருக்க, இரண்டாவது மனிதன் தூண்டிலைச் சீர்செய்து கொண்டிருந்தான். மூன்றாவது மனிதன் தங்களின் படகிலிருந்த ஒரு சிறிய சேதத்தைச் சரிபண்ணிக் கொண்டிருந்தான்.
அவர்கள் மூவரும் தங்களின் பணிகளில் ஆழமாக மூழ்கியிருந்தனர்.
அருகில் வந்து நின்ற பாதிரியாரைப் பார்த்ததும் அவர்கள் அவரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.
"இவர்களையா மக்கள் உயர்ந்த மனிதர்கள் என்று நினைத்து வரிசை வரிசையாக வந்து பார்க்கின்றனர்!'' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட பாதிரியார் அவர்களை ஏளனமாக பார்த்தார்.
அவர்களிடம் "நீங்கள் எப்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்வீர்கள்?'' என்று பாதிரியார் கேட்டார்.
அதற்கு அவர்கள் "எங்களையும் உலகத்தையும் உலகமக்களையும் உயிரினங்களையும் படைத்த சர்வவல்லமை படைத்த கடவுளே, உமக்கு நன்றி!'' என்று கூறுவோம் என்றார்கள்.
அதைக்கேட்டு கிண்டலாக சிரித்தார் பாதிரியார்.
"இதுவா பிரார்த்திப்பது? இதை யார் வேண்டுமானாலும் கூறலாம். இதுவல்ல பிரார்த்தனை. பைபிளில் இப்படியா இருக்கிறது?'' என்று கூறிய பாதிரியார், தேவாலயத்தில் தான் தினமும் என்ன வார்த்தைகளை பயன்படுத்தி பிரார்த்தனை செய்கிறோம் என்பதையும், அப்படிச் செய்வதுதான் கிறிஸ்தவ மதத்தின்படி சரியானது என்பதையும் விளக்கிக் கூறினார்.
அத்துடன் நிற்காமல், தான் கூறிய பிரார்த்தனை வரிகளை திரும்பத் திரும்ப கூறும்படி அவர்களிடம் பாதிரியார் கூறினார். அவர்கள் தட்டுத் தடுமாறி அந்த வரிகளைக் கூறினர். இடையே தவறு உண்டாக, அதை பாதிரியார் சரி பண்ணினார்.
பின்னர் "ம்.... இதுதான் உண்மையான பிரார்த்தனைக்கான வரிகள்! இதைத்தான் இனிமேல் நீங்கள் கூற வேண்டும். நீங்கள் இதுவரை கூறி வந்ததை நிறுத்திக்கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார். அந்த மூன்று மனிதர்களும் மீண்டும் பாதிரியாரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள்.
அந்த மூன்று மனிதர்களையும் வெற்றி பெற்றுவிட்ட கர்வத்துடன் தன் படகை நோக்கி நடந்தார் பாதிரியார்.
படகில் ஏறினார். படகு புறப்பட்டது. கடலின் கால் பகுதியைத் தாண்டியிருப்பார். யாரோ ஓசை எழுப்பியவாறு ஓடிவரும் சத்தம் கேட்டது.
பாதிரியார் திரும்பிப் பார்த்தார். அந்த மூன்று மனிதர்களும் கடலில் வேகமாக ஓடிவந்து கொண்டிருந்தார்கள்.
"கடலில் மனிதர்கள் ஏதோ தரையில் ஓடி வருவதைப்போல ஓடி வருவதா?'' அவர்களை வியப்புடன் பார்த்தார் பாதிரியார்.
ஏசு நீரின்மீது நடந்தார் என்பதைப் பற்றி அவர் படித்திருக்கிறார். ஆனால், மூன்று சாதாரண மனிதர்கள் கடல் நீருக்கு மேலே ஓடிவருவது
என்றால்....?
பாதிரியாரால் அந்த அற்புத காட்சியை நம்பவே முடியவில்லை.
"ஃபாதர்.... ஃபாதர்... கொஞ்சம் படகை நிறுத்துங்க''.
அந்த மூன்று மனிதர்களும் கத்தினார்கள்.
படகோட்டியிடம் படகை நிறுத்துமாறு கூறினார் பாதிரியார்.
சிறிது நேரத்தில் படகிற்கு அருகில்வந்த அந்த மூவரும் பாதிரியாரிடம்-
"ஃபாதர்... நீங்கள் கூறிய பிரார்த்தனை வரிகளில் இரண்டு வரிகள் ஞாபகத்தில் இருக்கின்றன.
மூன்றாவது வரியை மறந்து விட்டோம். தயவுசெய்து இன்னொரு முறை எங்களுக்கு அதைக் கூறுகிறீர்களா?''- என்று அவர்கள் கெஞ்சி கேட்டுக்கொண்டார்கள்.
அதற்கு பாதிரியார் கூறினார்:
"உங்களுக்கு அது தேவையில்லை. நீங்கள் கடவுளுக்கு அருகில் இருக்கிறீர்கள். தோற்றத்தை வைத்து நான் உங்களைச் சாதாரணமாக நினைத்துவிட்டேன். நீங்கள் என்னைவிட எங்கோ உயரத்தில் இருக்கிறீர்கள்.
உங்களுக்கு முன்னால் நான் தூசுக்கு நிகரானவன். நீங்கள் இப்போது எப்படி பிரார்த்தனை செய்கிறீர்களோ, அதையே செய்யுங்கள். நீங்கள் ஞான நிலையை அடைந்துவிட்ட அற்புத பிறவிகள்!''
அந்த மூன்று மனிதர்களும் பாதிரியாரின் கால்களைத் தொட முயன்றார்கள். ஆனால், அதைத் தடுத்துவிட்டார் பாதிரியார்.
"என் கால்களை நீங்கள் பற்றாதீர்கள். நான்தான் உங்களின் கால்களைப் பற்றவேண்டும்'' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் பாதிரியார்.
படகு புறப்பட்டது. ஞான நிலையை அடைந்துவிட்ட அந்த மூன்று மனிதர்களும் மீண்டும் கடல் நீருக்கு மேலே வேகமாக ஓடினார்கள்.
சிறிதும் நினைத்துப் பார்க்க முடியாத அந்த அற்புத காட்சியைப் பார்த்தவாறு படகில் பயணித்து சென்றுகொண்டிருந்தார் பாதிரியார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/04/osho-2025-12-04-13-27-18.jpg)